Skip to main content

"நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு" - ஜோதிமணி எம்.பி. அழைப்பு!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

"An Opportunity to Work in Parliamentary Proceedings" - Jyoti Mani MP Call!

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள், நாடாளுமன்றச் செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு, http://tiny.cc/karurmpinternship என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் தலைவர்களுக்கான பயணம் ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், செனட்டர்கள், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ் என்று பலரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தது. 

 

அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுவதைப் பார்த்தேன். அரசியல், அரசாங்கம், களப்பணிகள், பல துறைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பு, தங்கள் புதுமையான யோசனைகளை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு என்று இந்த வாய்ப்பு பல்வேறு வாயில்களை விரியத்திறப்பதை உணர்ந்தேன்.

 

மேலும் அரசியல் தளத்தில், மக்களோடு பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு, இதுபோன்ற வாய்ப்புகள் ஒரு முதற்படியாகவும் அமைகின்றன. இப்படி தொடங்கிய பலர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். அரசியலுக்கு வர விரும்பாமல் வேறு துறைகளில் பயணிக்க விரும்புவர்களுக்கும் இந்த வாய்ப்பு மிகச்சிறப்பான அனுபவங்களை அளிக்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாணவர்கள், இளைஞர்களின் புதிய அணுகுமுறைகளை, சிந்தனைகளை அறிந்துகொண்டு செயல்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு.

 

ஏன் இதுபோன்ற வாய்ப்புகள் நமது நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை என்று அப்பொழுது யோசித்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு டெல்லியில் பிஆர்எஸ் (PRS Legislative) போன்ற அமைப்புகள் இம்மாதிரியான வாய்ப்புகளை வழங்கிவருவதை அறிந்தேன். ஆனால் இதில் பெரும்பாலும் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், படித்தவர்கள், சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள், குடிமைப்பணித்தேர்வை எழுத விரும்புபவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவர்கள் மட்டுமே இதுபோன்ற வாய்ப்புகள் குறித்து தெரிந்திருக்கின்றன. 

 

சாதாரணமான, எளிய  குடும்ப, சமூகப் பின்னணியில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் இருப்பதே தெரிவதில்லை. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. இதன் முதற்கட்டமாக எனது நாடாளுமன்ற பணிகளில், களப்பணிகளில், அரசியல் பணிகளில் ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு எனது தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறேன்.

 

தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு முயற்சி யாராலும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவிலும் தனிப்பட்டமுறையில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இம்மாதிரியான முயற்சியை முன்னெடுத்திருப்பது அரிது. இது ஒரு சிறப்பான வாய்ப்பு. விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பணியின்போது வழங்கப்படும் சான்றிதழ்கள், பணி அனுபவம் மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளில் கவனிக்கப்படும். 

 

இந்த முயற்சி வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். இதுதொடர்பாக உங்கள் மேலான கருத்துக்களையும் வரவேற்கிறேன். நன்றி" இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்