Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: எடப்பாடியின் மூக்கை உடைத்த விவசாயிகள்!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

எட்டுவழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து, சேலத்தில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் திரண்டு வந்து புதன்கிழமையன்று ஆட்சேபனை மனு வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 சதவீதம் பேர்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக கூறிவந்த நிலையில், விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டு அவருடைய மூக்கை உடைத்துள்ளனர்.

 

 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலப்பரப்பை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களில் 186 ஹெக்டேர் தனியார் பட்டா நிலங்கள் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலம் இந்தத் திட்டத்தால் பறிபோகின்றன.

 

 

எட்டு வழிச்சாலைக்காக எடுக்கப்பட உள்ள நிலத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலமானது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும். அவை இருபோகம் விளைச்சல் தரக்கூடியவை. இதனால் தொடக்கம் முதலே விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்காகவும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக மட்டுமே இத்திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், எட்டுவழிச்சாலைத் திட்டம் என்பது முற்றிலும் வணிகப்பயன்பாட்டுக்கானது என்றும் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை பற்றிய அறிவிப்பிலும் நம்பகத்தன்மை ஏற்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் விவசாயிகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில்தான், கடந்த 15.12.2018ம் தேதியன்று ஓமலூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 11 சதவீதம் மக்கள்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 89 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்,' என்று கூறினார். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக களமாடி வரும் விவசாயிகள், முதல்வரின் எட்டுவழிச்சாலை ஆதரவு பேச்சால் மேலும் கொதிப்படைந்தனர். அவருக்கு தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் வகையில், முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் புதன்கி-ழமையன்று (19.12.2018) விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். 

 

 

நிலவாரப்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, நாழிக்கல்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர், பருத்திக்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், சித்தனேரி, வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை 10 மணியளவில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

விவசாயிகள் அங்கே ஒன்று கூடக்கூடாது என்றும், பேரணியாகச் செல்ல அனுமதியில்லை என்றும் காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக முழ க்கங்களை எழுப்பினர். பொறுமையி-ழந்த காவல்துறையினர் அவர்களை பேரணியாகச் செல்ல அனுமதித்தனர்.

 

 

விவசாயிகள் பேரணியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளுவர் சிலை, ராஜாஜி சிலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பல விவசாயிகள் கரும்பு மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

 

 

ஆட்சியரக வளாகத்திற்குள் அனுமதிக்கும் முன்பாக விவசாயிகளில் யாராவது மண்ணெண்ணெய் பாட்டில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களுடன் வந்துள்ளனரா என்பதை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியரக வளாகத்திற்குள் அனுப்பினர். 

 

 

காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர்கள் ராஜா காளீஸ்வரன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், ஆய்வாளர்கள் சரவணன், நாகராஜன், குமார், பிரேமலதா, ஷர்மிளாபானு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர். 

 

 

விவசாயிகளிடம் இருந்து ஆட்சேபனை மனுக்களை பெறுவதற்காக நிலம் எடுப்பு வட்டாட்சியர்கள் தலைமையில் ஐந்து அலகுகளாக பிரிக்கப்பட்டு, அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதல் அலகில் 92 பேரும், இரண்டாவது அலகில் 150  பேரும், மூன்றாவது அலகில் 40 பேரும், நான்காவது அலகில் 34 பேரும், ஐந்தாவது அலகில் 48 பேரும் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். அதாவது மொத்தம் 364 பேர் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனுக்களை வழங்கினர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதையடுத்து விவசாயிகள், எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆட்சியரக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

ஒரே நபருக்குச் சொந்தமாக பல சர்வே எண்களில் நிலங்கள்¢ இருப்பதால், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் தருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு விவசாயிகள், 'நாங்கள் கொடுத்த ஒரே ஆட்சேபனை மனுவில் சர்வே எண்களை பிரித்து எழுதி இருக்கிறோம். அவற்றை எண்ணிப்பார்த்து எத்தனை சர்வே எண்தாரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகக் கணக்கிட்டுச் சொல்லுமாறு கூறினர். 

 

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போதும் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களை கைது செய்வதற்கும் காவல்துறையினர் தயாராக வாகனங்களை கொண்டு வந்தனர். பின்னர் விவசாயிகள், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்களை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.  

 

 

இதையடுத்து ஐந்து அலகுகளிலும் சேர்த்து மொத்தம் 556 ஆட்சேபனை மனுக்களை வழங்கியுள்ளனர். எட்டுவழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 725 சர்வே எண்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கணக்கிட்டால் 76.68 விவசாயிகள், எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு கொடுத்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. 

 

 

அதிமுகவை சேர்ந்த விவசாயிகள், மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருப்போர் உள்ளிட்ட பிரிவினர் இன்றைய பேரணியில் கலந்து கொள்ளவில்லை. எனினும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மூக்கை உடைத்துவிட்டதாகவும் சேலம் விவசாயிகள் கூறினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்