நாகையில் கஜா புயல் பாதித்த 181 கிராமங்களுக்கு மட்டுமே அரசின் நிவாரண சலுகைகள் பொருந்தும் என அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை மூட்டியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிராமத்தில் பல ஆண்டுகாலமாக பழுதடைந்திருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதிதாக கட்டுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். அப்போது கீழையூர் கிராமத்தில் கஜா புயலால் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காசோலையை அமைச்சர் மணியன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன்," கஜா புயல் பாதித்த பகுதிகளில் 95% நிவாரண பணிகள் முடிந்துவிட்டது, கஜா புயல் பாதித்த பகுதிகளில் வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கம் நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும். பட்டா வைத்திருப்பவர்கள், கோவில் நிலத்தில் குடியிருந்தவர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கட்டாயம் கட்டித்தரப்படும். குடிசை இல்லா டெல்டாவை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது."என்றார்.
நிவாரணம் கேட்டு பொதுமக்கள் இன்னும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்களே என கேட்டபோது, "கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் பொருந்தும். என்றார் திட்டவட்டமாக.
கஜாபுயல் நிவாரணம் கிடைக்காமல் பல கிராமத்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் பேச்சு பலதரப்பட்ட மக்களையும் எரிச்சல் அடையசெய்துள்ளது.