சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரிகளில் பயில அந்தந்தப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் நேரடியாக விண்ணப்பம் கொடுத்து கல்லூரியிலிருந்து வழங்கும் சான்றுகளையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகு கல்விக் கடன் வழங்கினார்கள். ஆனால் பல வருடங்களாக கல்விக்கடன் கொடுப்பது குறைந்து வருகிறது. இந்த நிலையில் கல்விக் கடன் பெற விரும்புவோர் மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 'வித்யாலெட்சுமி' என்ற இணையத்தில் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பித்த பிறகு இந்த விண்ணப்பத்தை ஆய்வுக்குழு ஆய்விற்கு பிறகு அந்தந்தப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் பெறலாம் என்று சொன்ன பிறகு சம்மந்தப்பட்ட வங்கியின் நிதியின் அளவைப் பொறுத்து கல்விக்கடன் வழங்க உள்ளது.
இதற்கான 'வித்யாலெட்சுமி' இணைய வழி விண்ணப்பிக்கும் முகாமை கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஏற்பாட்டில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு இணையத்தில் விண்ணப்பம் செய்த சான்றை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். ஒரே நாளில் 560 மாணவ, மாணவிகள் கல்விக் கடன் கேட்டு வித்யாலெட்சுமி இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை குழு ஆய்வு செய்த பிறகு கல்விக் கடன் வழங்க வங்கிகளுக்கு சம்மந்தப்பட்ட ஆய்வுக்குழு பரிந்துரை செய்யும் என கூறப்படுகிறது. மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்ய கணினி மற்றும் இணைய வசதிகளை தனியார் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. இதில் எத்தனை மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு எவ்வளவு நாளில் கல்விக்கடன் பெற தகுதியானவர்கள் என்று ஆய்வுக்குழு பரிந்துரை செய்யப் போகிறது. பரிந்துரை செய்யப்படும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகள் முன்வருமா என்ற பல கேள்விகளுடன் விண்ணப்பித்த மாணவர்கள் சென்றுள்ளனர்.