18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் , வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும், அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் 135 பக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சுந்தர் தீர்ப்பின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது:
’’சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. அதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தில் நீதிமன்றம் தலையிடலாம். ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சி தாவல் என்று அர்த்தம் ஆகாது. எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநரிடம் மனு அளித்ததால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஜக்கையன் என்ற எம்.எல்.ஏவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படாததில் இருந்து சபாநாயகர் உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெரிகிறது.
சபாநாயகரின் அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக மட்டும் தான். மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்காக அல்ல. சபாநாயகரின் முடிவு பாரபட்சமாகவும் , சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது. ’’