புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி தெற்குத் தெரு சுப்பிரமணியன் மனைவி கவிதா (வயது 40). இவரது அக்கா கணவர் திருச்சி கொட்டப்பட்டில் வசித்துவரும் கட்டிட ஒப்பந்தக்காரர் பாலசேகர். கவிதாவிற்கு துணிக்கடை வைக்க கடன் கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்று கடந்த மே 9 ந் தேதி கவிதா வீட்டுக்கு தனது நண்பர்களுடன் வந்து பணத்தைக் கேட்டு தகராறு செய்து கவிதா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தீப்பற்றிய நிலையில், தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் கவிதா மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசேகரை கைது செய்து லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் துப்பாக்கியை வடமாநில இளைஞரிடம் வாங்கியதாக பாலசேகர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து பாலசேகருக்கு துப்பாக்கி விற்பனை செய்த உத்திரப்பிரதேசம் மாநிலம் பாந்தா மாவட்டம், திருப்பாதி அஞ்சல், சதா கிராமத்தைச் சேர்ந்த போப் கிஷோர் மகன் நித்திஷ் குமார் (34) என்ற இளைஞரை கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். நித்திஷ் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நித்திஷ்குமார் வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளார் என்பது அவரை விசாரணை செய்து முடிக்கும் போது தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.