நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் நியமித்த, ஒரு நபர் விசாரணை கமிஷன் எந்த உண்மையை கண்டுபிடித்தது என தெரியவில்லை என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டிற்கு சென்றது தவறு. அவர் தனது கடைசி காலத்தில் இப்படி திசை மாறிச்சென்றது வெட்கக்கேடானது. காங்கிரசுக்கு அவர் துரோகம் செய்தார் என்பதை விட இந்திய மக்களுக்கு இந்தியாவின், மதச்சார்பற்ற கொள்கைக்கு துரோகம் செய்துவிட்டார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷனை கவர்னர் நியமித்தார். அந்த விசாரணை கமிஷன் எந்த உண்மையை கண்டுபிடித்தது என தெரியவில்லை.
தமிழக கவர்னருக்கும், நிர்மலாதேவிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெளிவாகவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியா காந்தி உடனே அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதே போன்று மோடியும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்கவேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுருட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.