Skip to main content

‘தகரக் கொட்டகையில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்’ - அமைச்சர் மெய்யநாதன்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

new building Rs 2.6 crore for government school which is running tin shed

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உடைந்ததால் 2017ம் ஆண்டு பாதுகாப்பில்லாத பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப முடியாது என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பில்லாத ஆபத்தான கட்டடம் என்று பூட்டி சீல் வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிதியில் அரை சுவர், ஜன்னல் கம்பிகளுடன் தகர சீட் போட்டு 6 வகுப்பறை கட்டப்பட்டது. வெயில் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் மரத்தடியிலும் கிராமத்தினர் அமைத்துக் கொடுத்துள்ள தகரக் கொட்டகையிலும் என வகுப்பறை கட்டடம் இல்லாமல், 205 மாணவ மாணவிகள் பாதுகாப்பில்லாத தற்காலிக தகரக் கொட்டகையில் பல வருடமாகப் பயின்று வருகின்றனர். மழைக் காலங்களில் தற்காலிக வகுப்பறை தகரக் கொட்டகையில் மழைச் சாரல் அடிப்பதால் மாணவ, மாணவிகள் புத்தகப் பைகள் நனையாமல் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கும் அவல நிலையில் உள்ளது. இதனை நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம்

 

இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அரயப்பட்டியில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, அரயப்பட்டி பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருநாளூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் சில ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிட்டது. ஒரு கட்டடம் 40 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருக்க வேண்டும் ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டடம் கட்டிய ஒப்பந்தக்காரர் அவ்வளவு மோசமாக கட்டியதால் சில ஆண்டுகளில் சேதமடைந்துவிட்டது. கட்டடம் சேதமடைந்துவிட்டதை அறிந்து ஆபத்து வராமல் தடுக்க நான் போய் பார்த்து உடைக்கச் சொன்னேன். ஆனால் அந்த மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறையில் படிப்பதாக கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

 

இப்போது திருநாளூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நபார்டு மூலம் ரூ.2.6 கோடியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டப்படும்” என்றதாக கூறப்படுகிறது. விரைவில் பள்ளிக் கட்டடம் கட்டப்படும் என்ற அமைச்சரின் இந்த தகவலால் திருநாளூர் பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்