Skip to main content

நெமிலி கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - அன்புமணி

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Nemili Temple accident Anbumani statement

 

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் நடந்த கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடனாக பக்தர் ஒருவர் தொங்கியபடி வந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அரசுக்கு கோரிக்கை வைத்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகில் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நெமிலியை அடுத்த கீழ்வீதியில் உள்ள மண்டியம்மன் கோயிலின் மயிலேறும் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழா நடைமுறைகளின் ஒரு கட்டமாக பக்தர்கள் கிரேனில் தொங்கியபடியே சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கிரேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிரேனில் தொங்கியபடியே வந்த மாணவர் ஜோதிபாபு கீழே விழுந்து உயிரிழந்தார். திருவிழாவில் பங்கேற்றிருந்த முத்து, பூபாலன், சின்னசாமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

 

சாலை சரியில்லாததால் தான் கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாக்களில் எத்தகைய விபத்துக்கும் இடமளிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். விபத்து நடந்த இடத்தில் மருத்துவ வசதிகளோ, அவசர ஊர்தி வசதிகளோ செய்யப்படவில்லை. திருவிழாவுக்கு அனுமதி அளித்த காவல்துறையும், அரசு நிர்வாகமும் கூட இவற்றை உறுதி செய்யவில்லை.

 

இனி வரும் காலங்களில் கோயில் திருவிழாக்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். அந்த விதிகள் மீறாமல் இருப்பதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து கோயில் திருவிழாக்களிலும் மருத்துவ வசதிகளும், அவசர ஊர்தி வசதியும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.

 

கிரேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் 8 பேருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்