Skip to main content

நீட் விலக்கு மசோதா- ஆளுநருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Need Exemption Bill - Chief Minister's letter to the Governor again!

 

நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. 

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (14/04/2022) எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழக சட்டமன்றப் பேரவையில் இப்பொருள் குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட போதும், நேரில் ஆளுநரைச் சந்தித்து இது குறித்து தான் பேசிய பின்னரும். நீட் தேர்வு மசோதாவானது ஆளுநரால், இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் நேரில் சந்தித்து இப்பொருள் குறித்து வலியுறுத்தியபோது ஆளுநர் இம்மசோதா தன்னால் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழக சட்டமன்றப் பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும் மாண்புமிகு ஆளுநரிடம் இக்கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், இந்நிகழ்வில் முன்னேற்றம் காணப்படாததால், இன்றைய தினம் (14/04/2022) தனது அமைச்சரவையின் இரண்டு மூத்த அமைச்சர்களை ஆளுநரைச் சந்தித்து, இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்தக் கேட்டுக்கொண்ட போது, அவர்களிடம் நீட் தேர்வுக்கான மசோதாவானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற உறுதியான பதில் பெறப்படாத நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழக சட்டமன்றப் பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்து, ஆளுநருக்கும், மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமூகமாகவும் இருக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்