Skip to main content

கொல்லிமலை: மனைவி 'ஒத்துழைக்க' மறுப்பு; 2 குழந்தைகளை 200 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தை!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கொல்லிமலை அருகே, மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது இரு குழந்தைகளையும் 200 அடி பள்ளத்தில் வீசிக்கொன்ற கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.  


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (28). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு இரு குழந்தைகள். மகன், கிரிராஜ் (8); மகள் கவிதர்ஷினி (5). 


சிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் முன்பு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் பாக்கியம் கோபித்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். என்றாலும், கடந்த 7ம் தேதியன்று, குழந்தைகளை மட்டும் கணவர் சிரஞ்சீவி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை (நவ. 13, 2019) அன்று பாக்கியம், உறவினர்களிடம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, சிரஞ்சீவியுடன் குழந்தைகள் இல்லை என தெரிய வந்தது.  


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீக்குப்பாறை காட்சி முனை (வியூ பாயிண்ட்) பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசியெறிந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிரஞ்சீவியை காவல்துறையினர் கைது செய்தனர்.


காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:


எனக்கு சரிவர காது கேட்காது. எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். மது குடிக்கும் பழக்கமும் உண்டு. இதனால் எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார். 


அவரை திரும்பவும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, குழந்தைகளை அழைத்து வந்து உறவினர்கள் வீடுகளில் மறைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் காணாமல் போய்விட்டதாக மனைவியிடம் மிரட்டி வரவைப்பேன். கடந்த சில மாதங்களாகவே பாக்கியம் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் எங்களுக்குள் மேலும் தகராறு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக ஏற்பட்ட தகராறின்போதும் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 7ம் தேதியன்று, மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். 


எப்படியும் குழந்தைகளைப் பார்க்க என் மனைவி வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன். சொந்தக்காரர்களிடமும் சொல்லி அனுப்பினேன். ஆனால் பாக்கியம் வீட்டுக்கு வராததால், குழந்தைகளைக் கொல்ல திட்டம் போட்டேன். அதன்படி சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று, அங்கிருந்து 200 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசி எறிந்தேன். 


இவ்வாறு வாக்குமூலத்தில் சீரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விசாரணையின்போது அடிக்கடி சிரஞ்சீவி முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு, சில நேரங்களில் மூர்க்கத்தனமாகவும் பதில் அளித்ததாகவும் கூறினர். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

சார்ந்த செய்திகள்