Skip to main content

நக்கீரன் கோபால் கைது அடக்குமுறையின்  உச்சம்: உடனடியாக விடுவிக்க வேண்டும்!   ராமதாஸ்             

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

 

pn


 நக்கீரன் ஆசிரியர் கைதைக் கண்டித்து-பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-- ‘நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து புனே செல்லவிருந்த அவரை சென்னை மாநகரக் காவல் துறையினர் விமான நிலையத்தில் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

   தமிழக ஆளுனரின் பணிகளில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஆளுனர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளை  சில பெரிய     மனிதர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கட்டாயப் படுத்தியது தொடர்பான வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து  நக்கீரன் இதழ்களில்  தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.        

                                   

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமானத் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்