திருவண்ணாமலை சிவன் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பல பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருவண்ணாமலை சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள திருவண்ணாமலை நாயுடுகள் சங்கத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தமிழ் உள்பட வேறு பல மொழிகளில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், திருமண மண்டபத்தின் முன்பு உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலையின் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் (44) சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அதன் பின்பு, அவர் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று அறிவிப்பு பேனரை பார்த்துள்ளார். அப்போது, அதில் தமிழ் மொழியோடு தெலுங்கு மொழியில் இருப்பதைப் பார்த்து கோபமடைந்துள்ளார். அந்த திருமண மண்டபத்தின் மேலாளர் வெங்கடேசனிடம் அண்டை மாநில மொழியில் பேனர் வைத்திருப்பது ஏன் என்று பாலசுப்பிரமணியன் கேட்டுள்ளார். மேலும், தெலுங்கு மொழியில் வைத்திருக்கும் பேனரை அகற்றாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த திருமண மண்டபத்தின் நிர்வாகிகள் திருவண்ணாமலை டவுன் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.