நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் சீமான் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பெரும்பாலான சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நடந்து முடிந்த தேர்தலில் 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், அரணையூரில் உள்ள வீட்டில் அவரது தந்தை, தாய் வசித்து வந்த நிலையில், தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.