Skip to main content

2 சிறுமிகளைக் காவு வாங்கிய மர்மக் காய்ச்சல்... பீதியில் கிராமங்கள்!

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

 Mysterious fever... Villages in panic!

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சொரிமுத்து. தன் மகள் பூமிகா (6)  ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் கூலித் தொழிலாளியான சொரிமுத்து. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகாவின் உயிர் பிரிந்திருக்கிறது.

 

இதே போன்று அதே ஊரின் நடுத்தெருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பழனியின் மகள் சுப்ரியா (8) அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சுப்ரியா இறந்திருக்கிறார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பூமிகா, சுப்ரியா ஆகிய இரண்டு சிறுமிகளும் மர்மக் காய்ச்சலால் இறந்ததையடுத்து, கிராமமே பீதியில் உறைந்தது. மேலும் சுற்று வட்டாரப் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

 

காசிநாதபுரத்தில் குடிநீருடன் அசுத்தம் கலந்த நீர் வருவதால் தான் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. இந்தப் பகுதிகளின் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை. சுகாதாரக்கேடாக உள்ளன. குடிநீரில் புழுக்களும் காணப்படுகின்றன. தாமிபரணி ஆற்று குடிநீர் வருகிற பகுதியில் சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளது. மேலும் புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நீர் வழங்கும் உறை கிணறு பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் அசுத்தமாகக் காணப்படுகிறது.இவைகளைச் சீர் செய்து நோய் பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.

 

ஆலங்குளம் யூனியனில் 32 பஞ்சாயத்துக்களில் 130 சுகாதார மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றினர். அவர்கள் கிராமப்பகுதி வீடுகளுக்குச் சென்று குடி தண்ணீர் சுகாதாரக்கேடுகளை ஆய்வு செய்து, சீர் படுத்தி வந்தனர். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் 30 பணியாளர்களாகக் குறைக்கப்பட்டுவிட்டனர். இவர்களால் 32 ஊராட்சிப் பகுதியில் முழுமைக்கும் ஆய்வு செய்ய முடியுமா. இது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. காய்ச்சலுக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் எம்.ஜி.ஆர். மக்கள் சக்தியின் நிறுவனரான ரவிக்குமார்.

 

தற்போது அந்தக் கிராமத்தில் ஆலங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் கிராமத்திற்கு 10 நாட்களாக குடி தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலைமையானதால் மக்கள் நல்ல தண்ணீரை சேமித்து வைத்ததில் லார்வா உற்பத்தியாகி டெங்கு வரை, போய் விட்டது. இப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. என்கிறார் சுகாதார மேற்பார்வையாளரான கங்காதரன்.

 

மீண்டும் தலை தூக்குகிறதா டெங்கு என பீதியிலிருக்கின்றன கிராமங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்