திருச்சி லலிதாஜீவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலையில் நடந்த கொள்ளையில் சிக்கிய கொள்ளையன் முருகன் தான் தற்போது அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்திகளில் இடம்பிடித்துள்ளான். அவனை பற்றி தினமும் ஒரு தகவல்கள் வெளியாகி வருகிறது.
முருகன் ஆந்திரா – கர்நாடகா – தெலுங்கனா ஆகிய மாநிலங்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததும் தமிழகத்தில் 2018 ம் ஆண்டு முதல் கொள்ளையடிக்க ஆரம்பித்ததும். ஆனால் தமிழகத்தில் அவன் நடத்திய கொள்ளைகளில் அவன் பெயரை பதிவு பண்ணாமல் இருக்க காவல்துறை அதிகாரிகளுக்கு இலட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது என தற்போது வெளியாகி அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.
இந்த நிலையில் முருகன் கொள்ளையடித்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் அந்த ஏரியாவில் வாடகைக்கு குடியிருந்து கொள்ளையடித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்னதாக சென்னை பூஞ்சேரி கிராமத்திலிருந்து வந்திருப்பதாகக் சொல்லியும் பெரிய ரோடு போடும் ஒப்பந்தக்காரர் என்று சொல்லி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர், நருங்குழி நகர்ப் பகுதியில் வசிக்கும் ஷேக் அப்துல் கபூர் என்பவருக்குச் சொந்தமான வீட்டை சுமார் 60 ஆயிரம் முன்பணம் கொடுத்து, மாத வாடகை 6 ஆயிரம் பேசி அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் தங்கியிருக்கிறான். முருகன் தங்கியிருந்த வீட்டுப் பக்கம் உள்ள தெருக்கள், சேறும் சகதியுமாக மாறிக் இருப்பதை பார்த்த முருகன், அப்பகுதி மக்களிடம் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளது. அரசாங்கத்தை நம்பி பலனில்லை. ஆளுக்கு 500 ரூபாய் கொடுங்க. நான் எனது சொந்தச் செலவில் சாலை போட்டுத் தருகிறேன் என்று பெரும் பணக்காரன் போல் காட்டியிருக்கிறான். கொள்ளையடித்து விட்டு ஆயுதபூஜை கொண்டாடிவிட்டு தான் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறான்.
சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகில் உள்ள பஞ்சாப்நேஷனல் வங்கியை கொள்ளையடிப்பதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் டோல்கேட் அருகில் உள்ள தாளக்குடி அருகே அமிர்தா கேட்வே குடியிருப்பில் ரோடு போடும் ஒப்பந்தக்காரர் என்று சொல்லி 30,000 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து 6000 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருக்கிறான். வங்கி அருகே குடியிருந்ததால் அடிக்கடி வங்கி நோட்டம் பார்க்கவும் அவனுக்கு வசதியாக இருந்திருக்கிறது.
அதே போல ஒவ்வொரு வங்கி கொள்ளையின் போது தொடர் விடுமுறை நாட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தொடர்ச்சி 3 நாட்களுக்கு மேல் விடுமுறை உள்ளது போல் நாட்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சுவர்களை துளைபோடுவதை செய்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.