Skip to main content

முரசொலி நில விவகாரம்! தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று குற்றச்சாட்டு கூறி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரித்த தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், இதுதொடர்பாக விளக்கமளிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  ஜனவரி 7-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டுமென கூறியிருந்தார்.

 

 Mursoli land affair! Head of the Subordinate Commission ordered to respond!

 

இதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன் அறக்கட்டளைதாரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டியதில்லையென உத்தரவிட்டது. மேலும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் கூறியது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆவணப்பட்டியல் மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது என உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆணையத் தலைவரிடத்தில் ஆவணப் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,   முரசொலி விவகாரம் தொடர்பாக துணைத் தலைவர் முருகன் விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்

திமுக சார்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்  ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்,   தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் தலைவரிடம் முரசொலி நிலம்  பட்டா நிலம்தான் என்பது குறித்தான ஆவணப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    மேலும்,  தற்போது  ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் முருகன் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு  தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டவர். பாரதிய ஜனதா கட்சியின் எஸ்/எஸ்டி அணியின் தேசிய செயலாளராக இருந்துள்ளார்.  அவர்,   தற்போது தாழ்த்தப்பட்ட  ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.  முரசொலி நில விவகாரம் தொடர்பாக  முருகன் விசாரணை மேற்கொண்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விசாரணையை மேற்கொள்வார்.’ என்று வாதம் செய்தார்.

அதன் பிறகு  நீதிபதி சி.வி.கார்த்திகேயன்,   துணைத்தலைவர் முருகன்தான் விசாரிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரை இந்த வழக்கில் இணைக்குமாறு முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்