Skip to main content

கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

S A Ponnusamy



கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கரோனா நோய்த் தொற்றினால் கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில் நிறுவனங்களும், அரசு, தனியார் அலுவலகங்களும் முற்றிலுமாக மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் பொதுமக்களிடமிருந்து வாகன கடன், வீட்டுக்கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாத தவணைத் தொகையை முதலில் மே-31 வரையிலும், அதன் பிறகு ஆகஸ்ட்- 31 வரையிலும் என மொத்தம் ஆறு மாதங்களுக்கு வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய நிதியமைச்சரும் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் குற்றுயுரும், குலையுருமாக இருக்கும் மக்களின் கழுத்தை அறுக்கும் செயலைத் தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன.

 

 

 

rupees


கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரின் உத்தரவையும் மீறி தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் மாத தவணைகளை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், தன்னிச்சையாகச் செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் மிச்சம் மீதி இருக்கும் சொற்ப தொகையை அபராதம் என்கிற பெயரில் சுரண்டுவதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் கரோனா பேரிடர் காலமான தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லாத சூழலில் அவர்களை மாதத் தவணையைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறு கட்டாயப்படுத்தும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
 

http://onelink.to/nknapp


கந்து வட்டிக்காரர்கள் போல மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழியும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தைகளாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்