Skip to main content

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
1


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வரை சந்திக்கச் சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சேலத்தில் இன்று மதியம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது. புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உள்ளே நுழைய முயன்ற அரசுப் பேருந்தையும் தடுத்து நிறுத்தினர்.
 

dmk


முன்னதாக திமுகவினர் கலைஞர் மாளிகையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர். 'இழுத்து மூடு இழுத்து மூடு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு', 'விடுதலை செய் விடுதலை செய் தளபதியாரை விடுதலை செய்', 'பொய் சொல்லாதே பொய் சொல்லாதே எடப்பாடியாரே பொய் சொல்லாதே,' என்று முழக்கங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திமுக நிர்வாகிகள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஜி.கே.சுபாஷ், எஸ்.டி.கலையமுதன், ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயப்பிரகாஷ் உள்பட நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்