Skip to main content

’அரசியல்வாதியாக இருக்கக்கூடிய எனக்கும் ரசிகர் இருக்கின்றார்’- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (04-07-2019) தங்கராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:

’’அன்புடையோருக்கு வணக்கம், மணமக்களை வாழ்த்தக்கூடிய நிலையில் நாங்கள் வந்திருந்தாலும், அதிகம் உரையாற்றக்கூடிய சூழ்நிலையை நாங்கள் பெற்றிடவில்லை, இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நம்முடைய ஆற்காட்டார்  இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு நான் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் அத்தனை பேரும் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவேதான், இந்த மணவிழா நிகழ்ச்சிக்கான தேதி கேட்கின்ற நேரத்தில் அதற்கு நான் ஒப்புதல் தருகின்ற நேரத்தில், நீங்கள் போகின்ற வழியில் மாங்கல்யத்தை எடுத்துத் தந்துவிட்டால் போதும் வாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை, என்றனர். நாங்கள் இன்னொரு திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருக்கக்கூடிய காரணத்தைப் புரிந்துகொண்டு, மணவிழாவை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தங்கராஜ் அவர்களும், மாவட்ட கழகச் செயலாளர் அவர்களிடம் அதைத்தான் எடுத்துச் சொன்னார்கள்.

 

s

 

ஆனால், இங்கு வந்ததற்குப் பிறகு நீங்கள் மாத்திரம் கொஞ்சம் பேசுங்கள் என்று என்னை இங்கு பணித்தார்கள். எனவே ஒட்டு மொத்தமாக வந்திருக்கக்கூடிய அனைவரின் சார்பிலும், நான் மணமக்களை வாழ்த்தி போற்றக் கடமைப்பட்டிருக்கின்றேன். தங்கராஜன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் ஏற்கனவே இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தற்பொழுது இயக்கத்தில் எந்த பொறுப்பில் இல்லை என்று சொன்னாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் - இந்த இயக்கத்தின் உடன்பிறப்பு - நம்மை உருவாக்கிய தலைவர் கலைஞர் பெற்றிருக்கக்கூடிய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களில் ஒருவராக தங்கராஜ் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை நான் எண்ணிப் பார்க்கின்ற பொழுது மகிழ்ச்சி அடைகின்றேன் பெருமைப்படுகின்றேன்.

 

அதேபோல், இன்று மணமகனாக வீற்றிருக்கக்கூடிய விவேக் மற்றும் மணமகளாக வீற்றிருக்கக்கூடிய கீர்த்தி பிரியா அவர்களும், இன்றைக்கு தங்களுடைய இருவர் வாழ்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை நடத்த இருக்கின்றார்கள். நான் மாலையை மாற்றுவதற்காக, மணமகள் கையில் கொடுத்து, அதன்பிறகு மணமகன் கையில் மாங்கல்யத்தை கொடுத்து, இந்த மணவிழா நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்குப் பிறகு, மணமகனாக இருக்கக்கூடிய விவேக் அவர்கள், என்னிடத்தில் ஒரு கருத்தினை எடுத்துச் சொன்னார்.

 

என்னவென்று கேட்டீர்கள் என்றால், நான் உங்களில் தீவிர ரசிகன் என்று சொன்னார். எப்பொழுதும் ரசிகன் என்றால் சினிமா நடிகர்களுக்குத் தான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அரசியல்வாதியாக இருக்கக்கூடிய எனக்கும் ரசிகர் இருக்கின்றார். சிறு வயதில் இருந்தே நான் உங்களுடைய ரசிகன் என்று சொன்ன பொழுது எனக்கு அது தான் நினைவிற்கு வந்தது. இன்றைக்கு நீங்கள் என்னுடைய ரசிகனாக மட்டுமல்ல, என்னுடைய உடன்பிறப்புகளில் ஒருவராக, தம்பிகளில் ஒருவராக, நம்முடைய விவேக் அவர்கள் இருக்கின்றார். எனவே அவருக்கு இந்த மணவிழாவை நடத்தி வைப்பதில், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

இன்றைக்கு, தமிழ்நாடு இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதையும் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில், எப்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, இந்த  இயக்கத்திற்காக - தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கைக்காக நீங்கள் அந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றீர்களோ. அதேபோன்ற வெற்றியைத் தொடர்ந்து வழங்குவதற்கு உறுதியாக இருக்க வேண்டும், துணை நிற்க வேண்டும், என்றைக்கும் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை மாத்திரம் எடுத்து வைத்து மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்க - வாழ்க வாழ்க என்று ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.’’

சார்ந்த செய்திகள்