நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நிறுத்திவைத்திருந்த லாரியைத் திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், காட்டூரைச் சேர்ந்த கலையரசன் என்பவர் தனக்கு சொந்தமான லாரியைக் கீழ்வேளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். லாரியை வழக்கமாக நிறுத்தும் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கிடங்கில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
திடீரென லாரி காணவில்லை என அங்குள்ள ஊழியர்கள் லாரி ஓட்டுநருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த கீழ்வேளூர் போலீசார், கீழவெண்மணி ஆர்ச் அருகில் வாகன சோதனையை விரைவுப்படுத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த லாரிகளில் ஒரு லாரியில் வந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக உளறியிருக்கின்றனர். லாரியைத் திருடிச் சென்றவர்கள் இவர்கள்தான் என்பதைப் போலீசார் கண்டறிந்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, “கீழ்வேளூர் அருகே இறையான்குடி, சந்திரபடுகை பகுதியைச் சேர்ந்த தனசேகரன், வலிவலம் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் ஆகியோர்தான் லாரியைத் திருடியுள்ளனர். அவர்களிடமிருந்து லாரியைப் பறிமுதல் செய்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளோம். அதோடு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர். ஏற்கனவே மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் ஏற்றிவந்து இறக்குவதற்காக நிறுத்தியிருந்த லாரியை ஐந்நூறு மூட்டை நெல்லோடு கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கடத்தல் நடந்து மூன்று நாட்களுக்குள் அடுத்த லாரி கடத்தல் நடந்திருப்பது லாரி உரிமையாளர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கியுள்ளது.