சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ள கோவில் பெரிய சாமிநாதன் மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி ஊன்று கோல்கள், நடைக் கருவி, நடைப்பயிற்சி உபகரணங்கள், சிறப்புச் சர்க்கரை நாற்காலி, கைபேசி, நவீன மடக்கு குச்சிகள், நவீன திறன்பேசி, காதோலி கருவி, செயற்கை அவயங்கள் உள்ளிட்ட 1107 உபகரணங்களை ரூபாய் 51 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கூடுதல் ஆட்சியர் சரண்யா, உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் செல்வகுமார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வயலூரில் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம். மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுப்பு வீடுகட்டும் பயனாளிகள், சுய உதவிக்குழு வங்கிக் கடன் இணைப்பு, ஊரகம் மற்றும் நகரம், வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பயனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 607 பேருக்கு ரூ 17 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரத்திற்கு வங்கிக் கடன் காசோலைகளை வழங்கினார்கள். இதில் மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு உள்ளிட்ட ஊரக உள்ளாட்சித் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.