கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் இசைப்பள்ளி வெள்ளி விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி வரவேற்றார். அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் (கடலூர்) ஐயப்பன் விருதாச்சலம், ராதாகிருஷ்ணன் காட்டுமன்னார்கோயில், சிந்தனைச் செல்வன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய இசை பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு இசை பள்ளிகளிலே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தான் அதிக மாணவர்கள் பயில்கிறார்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் தற்போது கிடைத்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் மாவட்டத்திற்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.
அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேசுகையில், இந்த இசைப் பள்ளியில் அதிக மாணவர்கள் பயில்வதை பார்க்கும் போது அவர்களுக்குள் உள்ள ஆர்வத்தை பார்க்க முடிகிறது. நாதஸ்வர இளைஞர்களுக்கு ஓய்வூதியம் 2000 இருந்ததை 3000 ஆக தமிழக முதல்வர் உயர்த்தியுள்ளார். கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு பொற்கிழி ரூ 50 ஆயிரத்தை 1 லட்சமாக உயர்த்தி உள்ளார். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.