Skip to main content

மருத்துவமனை முதல் மயானம் வரை சென்று நடவடிக்கை மேற்கொள்ள இருக்கும் அமைச்சர்..!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

The minister who will go from the hospital to the grave and take action ..!

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை வைப்பதற்குப் பிணவறையில் இடம் இல்லாததால், நுழைவு வாயில் அருகே வைக்கப்படுகின்றன. இதனை செய்திகளின் வாயிலாக அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன், எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேற்று (16.05.2021) காலை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

 

அப்போது அமைச்சர், கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் தேரணிராஜனிடம் கேட்டறிந்தார். பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களைப் பரிசோதனை மேற்கொண்டு, பிணவறையில் தேங்கியிருக்கும் சூழ்நிலை உருவாகாத வகையில், உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். 

 

The minister who will go from the hospital to the grave and take action ..!

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் பிணவறை பாதுகாப்பு அறைக்கு வெளியே இருப்பதாக செய்திகள் மூலம் தகவல் அறிந்தேன். அந்த தகவலின் அடிப்படையில் இங்கு உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டோம். தற்போது அப்படி வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்களை மாற்று ஏற்பாடாக, குளிர்சாதன வசதியுடன் இருக்கின்ற அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஒரு வருட காலமாக உரிமை கோரப்படாத 52 உடல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. முறையாக உரிமை கோரப்படாத அந்த உடல்களை, மருத்துவக் கல்லூரி மற்றும் காவல்துறை அனுமதியுடன் அகற்ற வேண்டும். 

 

அந்தப் பணிகளைக் கடந்த காலத்தில் துரிதப்படுத்தாததால் இந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இங்கிருந்து காவல்துறைக்கு தெரிவித்து, உடனடியாக உடல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய இந்த ஆய்வு மருத்துவமனையோடு மட்டும் நின்றுவிடாமல், மயானங்கள் வரை செல்ல இருக்கிறோம். அங்கு, மயானங்களுக்கு வருகிற உடல்களை உடனடியாக அடக்கம் செய்வதற்கோ அல்லது எரியூட்டுவதற்கோ உண்டான சாத்தியக்கூறுகளை ஆராய இருக்கிறோம். எந்த மருத்துவமனையிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் 2 நாட்களுக்குமேல் இருப்பதில்லை. கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை 6மணி முதல் 8மணி நேரத்துக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு மருத்துவ நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் இனி ஒருநாளுக்கு மேல் பிணவறையில் தேங்காது” என அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்