கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மற்ற துறைகளைவிட மின்துறை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மற்ற துறை சார்ந்த பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டம் முழுவதும் சுற்றி வருகிறார். இந்த நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணி புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் தங்கமணி வந்தார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு மின் கட்டணம் ரத்து உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் எந்த உத்தரவாதமும் தராமல் முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என தனது வழக்கமான நழுவல் பேட்டியை மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி. புதுக்கோட்டையிலும் அரங்கேற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புறங்களில் நூறு சதவிகிதமும், கிராமப்புறங்களில் 80 சதவகிதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர் புறங்களில் நூறு சதவிகிதமும், கிராமப்புறங்களில் 40 சதவிகிதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
வெளிமாவட்டத்தில் பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒருசில விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது. சிகிச்சை பெற்றுவரும் வெளிமாநில மற்றும் மாவட்ட மின் வாரிய ஊழியர்களுக்கு முதல்வருடன் கலந்துபேசி உரிய நிவாரணம் வழங்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வருகின்ற 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இயற்கை பேரிடரின்போது எவ்வாறு அவர்கள் பணியாற்று கிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இருப்பினும் அவர்களின் தினகூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும் என அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படுவதாக தனது வழக்கமான நழுவல் பேட்டியை புதுக்கோட்டையிலும் அரங்கேற்றினார்.