தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (07.12.2023) டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். பின்னர் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், 'தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக மத்திய அரசு 450 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன்' என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழக மக்களின் பாதிப்பை அறிந்ததும் பிரதமர் மோடி கவலை அடைந்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு தமிழகம் வரும். சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக 521.29 கோடி ரூபாய் வழங்கப்படும். புயல் பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை பிரதமர் சார்பில் கூறுகிறேன். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும்' என்றார்.