Skip to main content

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை தொடர்பாக அமைச்சர் பொன்முடி அறிக்கை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Minister Ponmudi's statement regarding the statue of former Chief Minister Jayalalithaa!

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை பராமரிப்புத் தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (21/10/2021) அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சென்னை, காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையினை நிறுவிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 11, நாள் 05/01/2021- ன் படி, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அவரது பிறந்தநாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக முந்தைய அ.தி.மு.க. அரசால் 16/02/2021- ல் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

சுதந்திர போராட்டத் தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களின் போது மட்டுமே அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறையானது ஆண்டாண்டு  காலமாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. இனி வருங்காலங்களிலும் அவரது பிறந்தநாளன்று மேற்படி டாக்டர் ஜெயலலிதா வளாகத்தில் (தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை மன்ற வளாகம்) நிறுவப்பட்டுள்ள அவரது மேற்படி திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். 

 

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலையினை அ.தி.மு.க. சார்பில் பராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரது திருவுருவச் சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் யாவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. 

 

ஆதலால், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறை இல்லாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அரசின் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும்." இவ்வாறு அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்