கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தூண்டுதல்படி நள்ளிரவில் வீடு புகுந்து உறங்கிக்கொண்டிருந்த பெண்களை தாக்கிவிட்டு மாணவர்கள் உள்ளிட்ட 44 ஆண்களை கைது செய்துள்ளது நாகை காவல்துறை.
கஜா புயலால் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிய பகுதி வேதாரண்யம். அதில் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் முற்றிலுமாக சேதமானது. வீடுவாசலை இழந்த தலைஞாயிறு சிந்தாமணி தெருமக்கள், அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என சாலை ஓரத்தில் கடந்த 20 ம் தேதி மதியம் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வாகனம் மற்றும் அமைச்சரின் பாதுகாவலர்கள் இறங்கி சாலை ஓரத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை எச்சரித்தும் பிறகு கண்மூடி தனமாகவுமக தாக்கி விரட்டி அடித்தனர்.
அதற்கு முன்பே நிவாரணம் கேட்டு தலைஞாயிறு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் காவல்துறை அதிகாரிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து ஜேசிபி, காவல்துறை உள்ளிட்டவர்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த தலைஞாயிறு காவல்துறையினர், வாகனம் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் நேற்று இரவு 2 மணிக்கு சந்தானதெரு, கேசவன் ஓடை, சிந்தாமணி ஆகிய கிராமங்களை குறி வைத்து நள்ளிரவில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் உறங்கி கொண்டு இருந்த பெண்களை தாக்கிவிட்டு அந்த பகுதியை சேர்ந்த 43 நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது என்கிற பெயரில் கலவரத்தில் ஈடுபட்ட காவலர்கள் வீடுகளில் இருந்த பொதுமக்களின் வாகனங்களையும் உடைத்து அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் கொடுரத்தனத்தைக் கண்டித்து 5 கிராமமக்கள் அவசரமாக இன்று கூட்டம் நடத்தி காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவில்லை என்றால் குடும்பத்தோடு தலைஞாயிறு காவல்நிலையத்தில் தஞ்சம் புகும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சட்டரீதியாக இதனை எதிர்கொள்ள போவதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எற்கனவே புயலால் வீடு, தோட்டம், துரவுகளை இழந்து வீதியில் கையேந்தி காத்துக்கிடக்கும் அப்பாவிமக்களின் உடமைகளை கைது என்கிற பெயரில் அடித்துநொறுக்குவதும், உரிமைக்காக அறவழியில் போராடியவர்களிடம் வன்முறையாக தடியடி நடத்தியதோடு, வழக்கும் போட்டு கைதுசெய்திருப்பது பொதுமக்களிடம் அதிமுக அரசின் மீது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அதோடு ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊர்மக்களுக்கே இந்த நிலமையா என்றும் கோபப்படுகிறார்கள்.