பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். கொரோனா விதிமுறை என்பது 100 சதவிகிதம் அமலில் இருக்கிறது. திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும் இடங்கள் என எதுவாக இருந்தாலும் கொரோனா விதிமுறையைக் கடைப்பிடித்து நடத்துவது நல்லது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் நாம் விழாக்களை நடத்துகிறோம். எனவே கொண்டாட்டங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமக்கு பலனளிக்கும். அதனால் கொண்டாட்டத்தின் போது தனிமனித இடைவெளி, முககவசங்கள் அணிவது உள்ளிட்டவற்றை நீங்களே உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மையுடையது என்று சொல்லப்படுகிறது. பிஎஃப் 7 என்ற கொரோனா வைரஸால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவரின் மூலம் 17 அல்லது 18 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
தடுப்பூசி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “கொரோனா தடுப்பூசியை அதிகப்படுத்துவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. மேலும், தடுப்பூசியின் உற்பத்தியையும், விநியோகத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஒரு புதிய தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிற மூக்கின் வழியே மட்டும் செலுத்தும் அந்த மருந்துக்கு ரூ.800 விலை நிர்ணயித்திருப்பதாகச் செய்திகளின் வாயிலாகப் பார்த்தேன். இது தொடர்பான அறிவிப்பு அரசுக்கு முறையாக வரவில்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நம் முதல்வரின் வாயிலாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.