Skip to main content

நிஜ  ‘ஹீரோ’ ஆவாரா விஜய்? -ரசிகர் காட்சி ரௌத்திரம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
master in sivakasi theater

 

1981-ல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸ் ஆனது. சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஹீரோ எப்படியெல்லாம் கொலை செய்கிறான் என்பதே கதை. பின்னாளில் ‘புரட்சி இயக்குநர்’ என்றழைக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படம் இது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் பெயரும்கூட விஜய்தான்.

 

அதே (தந்தை) எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதையில், (மகன்) விஜய் நடித்து  2002-ல் ரிலீஸான படம் தமிழன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மையப்படுத்தியே,  இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.  
தமிழன் க்ளைமாக்ஸில் ஹீரோ விஜய் பேசி பிரபலமான வசனம் இது -  
‘ஒரு இந்து கீதையை தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு இஸ்லாமியர் குரான் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு கிறிஸ்தவர் பைபிள் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும்.’

 

நாற்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘சட்டம் ஒரு இருட்டறை’, 18 வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘தமிழன்’ குறித்தெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? விஜய் நடிப்பில் இன்று ரிலீஸான ‘மாஸ்டர்’ திரைப்படம்தான்!

 

master in sivakasi theater

 

முன்பெல்லாம், முன் கூட்டியே சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, தியேட்டர் முன்பாக ‘பிளாக்கில்’ விற்பார்கள். மாமூல் கிடைத்தாலும்கூட, அவ்வப்போது இந்த பிளாக் டிக்கெட் பேர்வழிகளை அடித்து இழுத்துக்கொண்டு போய், போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அப்படியென்றால், கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்பது சட்ட விரோதம்தானே?

 

சிவகாசியில் ஒரு தியேட்டரில் ‘ரசிகர் ஷோ’ என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் அனைத்துக் காட்சிகளுக்கும், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.450 என, கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்தனர் சிலர். அந்த டிக்கெட்டுகள் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் மூலம் பெற்று விற்கப்படுகிறது எனக் கூறப்பட்டது. தமிழகத்தில், சட்டத்துக்கு மதிப்பளிக்கும் சில தியேட்டர்களைத் தவிர, பல தியேட்டர்களிலும் இந்த கட்டணக் கொள்ளை பகிரங்கமாகவே நடக்கிறது.

 

மதுரையோடு ஒப்பிடும்போது, மக்கள் தொகையில் சிவகாசி, பதினைந்தில் ஒரு பங்குதான்! மதுரை வெற்றி தியேட்டரில், மாஸ்டர் திரைப்படத்துக்கான கட்டணம் ரூ.190 மட்டுமே! மதுரை வெற்றி தியேட்டரின் தரத்தோடு சிவகாசி தியேட்டரை ஒப்பிடவே முடியாது. ஆனால், மதுரை வெற்றி தியேட்டரைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

master in sivakasi theater

 

திரையில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குக்கு விசிலடிக்கும் ரசிகர்களும் சரி.. இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, முதல் நாளே சினிமா பார்க்கின்ற இந்தியக் குடிமகன்களும் சரி.. இந்திய அடிப்படைச் சட்டம் தெரியாதவர்களாக அல்லவா இருக்கின்றனர்!  

 

மாஸ் ஹீரோவான விஜய், கூடுதல் கட்டண விவகாரத்தைக் கையிலெடுத்து, முதலில் தன்னிடமிருந்தும், தனது ரசிகர்களிடமிருந்தும், மாற்றத்தைக் கொண்டுவந்தால், நிஜத்திலும் ஹீரோதான்!

 

 

சார்ந்த செய்திகள்