முதுநிலை மருத்துவப் படிப்பில் தொடரும் சமூக அநீதியை கண்டித்து 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தொடர்ந்து சமூக அநீதியை இழைத்து வருகிறது. ஒருபுறம் அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அளவிலான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சமூக அநீதி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50% அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இது மிகச்சிறந்த ஏற்பாடு ஆகும். இந்த ஏற்பாட்டின் காரணமாகவே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து கிராமப்புறங்களிலும், தொலைதூரங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இதனால் தான் ஊரகப் பகுதிகளில் வலிமையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்த முடிந்துள்ளது. இது தமிழகத்தின் சிறப்பாகும்.
ஆனால், இதை சிதைக்கும் வகையில் வகையில் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை இந்திய மருத்துவக்குழு வகுத்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக்குழுவின் விதியால் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக தொலைதூரப்பகுதிகளிலும், கடினமான பகுதிகளிலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் உமாநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்ட அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் அரசு மருத்துவர்களுக்கு ஓரளவாவது சமூக நீதி கிடைக்க வகை செய்யும் ஊக்க மதிப்பெண் முறைக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
ஊக்க மதிப்பெண் என்ற அரைகுறை ஏற்பாடு எந்த வகையிலும் முழுமையான சமூக நீதியை உறுதி செய்யாது என்பதால் தான் அரசு மருத்துவர்களும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தச் சிக்கல் குறித்து மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதை நாடு தழுவிய விவகாரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம், நிலைப்பாடு, முயற்சிகள் ஆகிய அனைத்தும் நியாயமானவை.
மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதில் தமிழக ஆட்சியாளர்கள்அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். இந்த விஷயத்தில் நீதிமன்றங்களில் நீதி கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று ஓராண்டாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் வலியுறுத்தவில்லை. இவ்வாறாக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டு துரோகம் இழைத்துள்ளன.
மற்றொருபுறம் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அநீதிகளை சரி செய்யும் வகையில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் 10.03.2018 சனிக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாட்டாளி மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி தலைமையிலும், மாணவர் சங்க செயலாளர்கள் வழக்கறிஞர் கடலூர் கோபிநாத், வழக்கறிஞர் சேலம் விஜயராஜா, அரூர் முரளிசங்கர், வேலூர் பிரபு ஆகியோர் முன்னிலையிலும் இப்போராட்டம் நடைபெறும். இதில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.