Skip to main content

''மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைக்க முடியாது''-வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பினர் பேட்டி

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

MANGO

 

கோடை காலத்தில் விற்பனைக்கு வரும் மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைக்க முடியாது என கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக இன்று கோயம்பேடு வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எப்போதுமே மாங்காய் சீசன் மார்ச்சில் ஆரம்பித்து ஜூனில் முடியும். ஆனால் மே மாதத்தில் மாங்காய் காற்றில் கீழே விழுந்துவிடும். மாங்காய் பூ வைத்து அது காயாகும் வரைக்கும் எவ்வளவோ மருந்துகளை தெளித்து சரி செய்கிறார்கள். ஆனால் மரத்திலேயே பழுக்கும் வரை விட்டால் காற்றில் கீழே விழுந்து நஷ்டம் ஏற்படும். அதற்காக முன்னரே மாங்காய் பறிக்கப்படுகிறது. அப்படி வரும் சரக்குகளை நாமே தெரிந்து கொண்டு கல் போட்டு பழுக்க வைக்கிறோம். தன்னால் மாங்காய் பழுக்கும் சூழ்நிலை வரும்போது யாரும் மருந்து வைக்க வேண்டியதில்லை. அந்த சூழ்நிலை வரை மரத்தில் மாங்காயை யாரும் விடமாட்டார்கள். விட்டால் மாங்காய் கீழே கொட்டி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

 

அதனால்தான் சைனா பொட்டலத்தை வைத்து மாங்காயை பழுக்க வைக்கிறார்கள். மாங்காயை ரசாயனம் வைத்து பழுக்க வைப்பதால் எந்த பாதிப்பும் வராது. மருத்துவர்களும் இது இயற்கைக்குப் புறம்பானது என்று நிரூபிக்க வில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் கார்பனேட் கல் பவுடர் தான் மாங்காய்க்கு மேலே வரக்கூடாது. அதனால்தான் பாதிப்பு ஏற்படும். புதுசா ஹைதராபாத்திலிருந்து கல் பேக் செய்யப்பட்டு வருகிறது. அங்கு பர்மிஷன் கொடுத்திருக்கிறார்கள். இங்க இருக்கிற அதிகாரிகள் அதை முறைப்படுத்துவது கிடையாது. முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும்போது வியாபாரிகளுக்குத் தகவலை தெரிவித்து விட்டு வந்து சோதனை செய்ய வேண்டும். ரவுடித்தனம் மாதிரி வந்து செய்வது சரியில்லை'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்