Skip to main content

கிராமப் பெண் உதவியாளருக்கு வரதட்சணைக் கொடுமை!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

arrested

 

கள்ளக்குறிச்சி அருகே கிராமப் பெண் உதவியாளருக்கு வரதட்சணைக் கொடுமை செய்து மணமுறிவு செய்யாமலே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள ரங்கப்பனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அப்பகுதியில் கிராம உதவியாளராகப் பணி செய்து வரும் ஆதிலட்சுமி என்பவருக்கும் சுரேஷுக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. 

 

கணவர் சுரேஷ், வரதட்சணையாக  மனைவி ஆதிலட்சுமியிடம் 10 சவரன் நகை கேட்டு அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன் 10) மனைவி ஆதிலட்சுமிக்குத் தெரியாமல் சுரேஷ் வேறொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையறிந்த ஆதிலட்சுமி தன் கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவரது கணவர் மற்றும் கணவரின் சகோதரி தமிழ்ச்செல்வி உட்பட சுரேஷ் குடும்பத்தினர் 6 பேர் சேர்ந்து ஆதிலட்சுமியை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்துள்ளனர்.

 

தனக்கு நீதி வேண்டும் என ஆதிலட்சுமி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகாரளித்துள்ளார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து சுரேஷ், அவரது சகோதரி தமிழ்ச்செல்வி உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்