சுமார் ஆயிரம் பேர் அமர்ந்திருந்த அரசு விழா அது.... விழா மேடையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்பட பல வி.ஐ.பி-க்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
நாற்பது நொடிகளில் 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களைச் சொல்லி புதிய உலக சாதனை புரிந்த, நான்காம் வகுப்பு சிறுமி இனியா இப்போது பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு செய்ய, கம்பீரமாக மைக் பிடித்த அந்த சிறுமி, தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை மள மளவென அழகிய உச்சரிப்புடன் சொல்லி முடித்தபோது, ஒட்டுமொத்த அரங்கமும் வியப்பில் ஆழ்ந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மிகுந்த நெகிழ்ச்சியுடன், சிறுமி இனியாவுக்கு கை கொடுத்து, பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலரும், இனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தஞ்சை ஆட்சியர், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டவர்கள், சிறுமி இனியாவின் சாதனை குறித்து மிகுந்த ஆச்சர்யத்துடன் பாராட்டி, வாழ்த்தினார்கள். தொன்மையான தமிழ் இலக்கிய நூல்கள் என்று சொன்னாலே அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி என ஒரு சில பெயர்களை தான் நம்மால் நினைவில் வைத்து பட்டியலிட முடியும். இதற்கு மேல் உள்ள ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதும், உச்சரிப்பதும் பெரியவர்களுக்கே மிகவும் சவலானது. கடினமான பெயர்களைப் பார்த்து படிப்பதற்கேகூட பலரும் திணறிப்போவார்கள். ஆனால் தஞ்சையைச் சேர்ந்த, நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி இனியா, 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை, அதுவும் நாற்பதே நொடிகளில் சொல்வது, மிகப்பெரிய சாதனை என என தமிழ்ப் பேராசிரியர்களே ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள்.
பழங்கால தமிழ் இலக்கிய நூல்கள் இத்தனை உள்ளதா?' என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு கிடுகிடுவென பட்டியலிட்டு, அழகிய உச்சரிப்புடன் அசத்தும் சிறுமி இனியா, ஆங்கில வழியில் படிக்கும் மாணவி என்பது தான், திகைப்பின் உச்சம். இனியாவின் இந்த சாதனை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சிறுமியின் சாதனைக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌவுந்தரரஜன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்,தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள எல்.ஐ.சி காலணி, ஜே.ஜே நகரில் வசிக்கும் ரேவதி-ராமகிருஷ்ணன் தம்பதியின் மகளான இனியா, கிரிஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூலில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இனியாவின் தற்போதைய சாதனை குறித்து, இவரது தாய் ரேவதியிடம் பேசியபோது ‘’இனியா, இரண்டு வயசு குழந்தையா இருக்கும்போதே, ஜனாதிபதி, ஆளுநர், பிரதமர், முதலமைச்சர் பெயர்களை சொல்லுவாங்க. அதை பார்த்துட்டு விருந்தாளிங்க, நண்பர்கள் எல்லாம் ஆச்சர்யப்படுவாங்க. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோட படங்களை பேப்பர்லயோ, டி.வி-யிலயோ பார்த்துட்டா, ரொம்ப குஷியாகி, அவங்களை பத்தி ரொம்ப கரெக்டா சொல்லுவாங்க.
எல்.கே.ஜி படிக்கும்போது ஸ்கூல் ஆண்டுவிழாவில் மேடையில நின்னு, செல்ஃபோன் அதிக நேரம் யூஸ் பண்றதுனால ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கிலீஷ்ல இனியா பேசினாங்க. சிறுதானியங்கள், அமேசான் காடு, அன்னிபெசன்ட் அம்மையார் பத்தியெல்லாம் இங்கிலீஷ்ல பேசியிருக்காங்க. நம்ம தாய்மொழியான தமிழ்ல இனியாவை சாதிக்க வைக்கணுங்கறது எனக்கு ஆசையா இருந்துச்சு. தமிழ் இலக்கிய நூல்களோட பெயர்களைச் சொல்லி இதுவரைக்கும் யாரும் உலக சாதனை புரிஞ்சதில்லைனு தெரிய வந்துச்சு. ஆனா இது சாத்தியமானு ஆரம்பத்துல தயக்கமாதான் இருந்துச்சு. ஆனாலும் நம்பிக்கையோடு, 60 தமிழ் இலக்கிய நூல்களோட பெயர்களை ரொம்ப குறுகிய நேரத்துக்குள்ள சொல்ல வைக்கணும்னு முடிவெடுத்தேன். இதற்கு குறைந்தபட்சம் ரெண்டு மாதமாவது இனியாவுக்கு பயிற்சி தேவைப்படும்'னு நினைச்சேன். ஆனால், இனியா 7 நாள்களிலேயே தயாராகிட்டாங்க. இனியாவோட சாதனையை நினைச்சி, ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.