Skip to main content

ரவுடி கொலை வழக்கு; மூவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை நீதிமன்றம்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Madras court upholds life imprisonment three rowdy related case

 

ஏரியா தகராற்றில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சென்னையைச் சேர்ந்த சத்தியராஜுக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர், கடந்த 2013ம் ஆண்டு  தனது சகோதரியோடு சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஏரியா தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் சத்தியராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்தியராஜுக்கு ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பிய நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 

இந்த வழக்கு தொடர்பாக விஜி என்பவர் சரணடைந்த நிலையில் அப்பன் ராஜ், வேலு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்றம் விஜி, அப்பன் ராஜ், வேலு ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதிகள் பி.என். பிரகாஷ், டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பலியான சத்தியராஜின் சகோதரி அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், தங்களுக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

 

இதனை ஏற்க மறுத்த  நீதிபதிகள்,  அனைத்து சாட்சிகளையும் முறையாக ஆய்வு செய்தே கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதால், அந்தத் தீர்ப்பில் தலையிடத் தேவையில்லை எனக்கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்