Skip to main content

கோடை மழை... மகிழ்ச்சியும், சோகமும்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
lost life are caused due to rain

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து 109 ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். தி.மலை, ராணிப்பேட்டை, வேலூரை சேர்ந்த சிலர் ஹீட் ஸ்ட்ரோக்கால் திடீர் மரணத்தை தழுவி மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்தனர்.

வயதானவர்கள், சிறுவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியே வராதீர்கள் என அரசே எச்சரிக்கை வழங்கி இருந்தது. முக்கிய இடங்களில் ஓ.ஆர்.எஸ் நீரையும் பருக ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தன. இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் கோடை மழை எப்போது வரும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

கடந்த ஒரு வார காலமாக திடீரென பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த நான்கு  நாட்களாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.  ஏலகிரி மலையின் தொடர்ச்சியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, பொதுமக்கள் படையெடுத்துள்ளனர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதேநேரத்தில் மழையினால் மக்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை,  வாலாஜாபேட்டை, சோளிங்கர், ஆற்காடு காவேரிப்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை காரணமாக சோளிங்கர் அருகே ஆடு மேய்த்த தேவிகா என்ற பெண் இடி தாக்கி உயிர் இழந்தார், அதேபோல் சோளிங்கர் அருகே மருதாளம் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டத்திலும் இடி தாக்கி  மூன்று பசு மாடுகள் உயிரிழந்தன. தந்தை மகன் இடி தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் குற்றால அருவியில் ஒரு சிறுவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அதீதமாக வந்த நீரால் அவன் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறையினர் கூறும் பொழுது,  மழைக்காலங்களில் மின்சார கம்பத்திற்கு அருகில் மரங்களுக்கு அருகில்  நிற்கக்கூடாது. இடி இடிக்கும் பொழுது மின்னல்களின் தாக்கம் மரங்களின் மீதும் மின்கம்பங்களின் மீதும் அதிகமாக இருக்கும் என்கின்றனர். மின் ஒயர்கள் அறுந்து கிடந்தால் அதன் அருகிலேயே செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் குளிக்கவோ, சுற்றுலா நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்