Skip to main content

66 ஆயிரம் போச்சே" –தலைகவிழ்ந்த அமைச்சர் தங்கமணி

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என அக்கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக பேசுவதற்கு முக்கிய காரணம் அதிமுகவில் உள்ள கொங்குமண்டல அமைச்சர்களான தங்கமணியும், வேலுமணியும்தான். இதில் வேலுமணியை விட அமைச்சர் தங்கமணிக்கே ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. டெல்லி பாஜக தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் அமைச்சர் தங்கமணி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு அரசியல் ரகசிய பணிகளை செய்து வருபவரும் தங்கமணிதான். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி உடன்பாட்டில் தங்கமணிக்கு பெரும்பங்கு உண்டு. "தங்கமணி டெல்லி, சென்னை என அரசியல் சாம்ராஜ்யத்தை கட்டி நடத்தினாலும் தனது சொந்த ஊரில் இப்படி குப்புற விழுந்து விட்டாரே என கூறுகிறார்கள் குமாரபாளையம் ர.ர. க்கள்.

 

minister thangamani

  

குப்புற விழுந்து விட்டார் என ர.ர. க்கள் கூறுவது அமைச்சர் தங்கமணியின் சொந்த ஊரான குமாரபாளையத்தில் சரிந்த அதிமுக ஓட்டுக்கள் தான். ஆம். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது இந்த ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக கணேசமூர்த்தி சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிமுகவை விட திமுக 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. ஆனால் சென்ற  சட்டமன்ற தேர்தலில் இந்த குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் தங்கமணி திமுகவை விட சுமார் 44 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இப்போதோ திமுகவுக்கு 20 ஆயிரம் வாக்குகள் கூடி அது அதிமுகவுக்கு குறைந்துள்ளது குமாரபாளையம் தொகுதி எனது கோட்டை என மார்தட்டி வந்த அமைச்சர் தங்கமணி தனது சொந்த ஊரிலேயே கட்சிக்கான வாக்குகளை குறைத்துவிட்டார்.

 

 

அமைச்சர் தங்கமணியின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த குமாரபாளையம் பகுதியில் தான் திமுகவுக்கு கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இந்த வாக்கு அளவை கணக்கிட்டு பார்த்த அமைச்சர் தங்கமணி "அய்யய்யோ இப்படி ஆகிவிட்டதே மற்ற சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு கூடுதல் வாக்கு கிடைக்காவிட்டாலும் குமாரபாளையம் தொகுதியில் கூடுதல் வாக்கு கிடைக்கும் என்று தானே பல கோடி வாரி இறைத்து செலவு செய்தேன் ஆனால் எனது தொகுதியிலேயே கட்சி 20 ஆயிரம் ஓட்டு பின்வாங்கி விட்டதே" என வேதனையோடு கூறிய அவர் "என்மீது தொகுதி மக்களுக்கு என் மீது கோபம் இருக்காது மத்திய அரசு மீதுதான் கோபம் இருந்திருக்கிறது" என கட்சி நிர்வாகிகளிடம் தன்னை சமாதானப்படுத்தி பேசியிருக்கிறார்.
 

 

இதற்கு அவர் தொகுதி அ.தி.மு.க. ர.ர.க்கள் "ஏனுங்க மாப்ளே ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? அட அது தாங்க,  நம்ம மச்சான் குப்புற விழுந்தாலும் அவரு சொல்வாராம் மாப்ளே இங்கே பார்த்தியா மீசையில மண் ஒட்டலே னு சொல்லீட்டு மீசையை தொடச்சிட்டு போவாரு அது போலத் தாங்க அமைச்சர் தங்கமணியண்ணன்" என கிண்டலாக கூறுகிறார்கள்.
 

சென்ற சட்டமன்ற தேர்தலில் தங்கமணி தி.மு.க.வை விட கூடுதலாக பெற்ற 44 வாக்குகளும் போய் மேலும் இருபதாயிரத்தை கொடுத்து 66 ஆயிரம் வாக்குகளை தி.மு.க.விடம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்