இளைஞர்களை லண்டன் அழைத்துச் செல்வதாக ஏமாற்றி கிர்கிஸ்தானில் தவிக்கவிட்ட ஏஜெண்ட் மற்றும் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சேகரிடம் கே.புதுப்பட்டி அணிகனியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால் லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் மற்றும் பாஸ்போர்ட்டை வாங்கிச் சென்றுள்ளார். இதேபோல பலரிடம் பணமும் பாஸ்போர்ட்டும் வாங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்தவர்களை லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்ற முகவர்கள் அவர்களை கிர்கிஸ்தானில் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்த சேகர், தான் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சேகர் கொடுத்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் கே.புதுப்பட்டி அணுகனி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்ராஜை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், தான் சேகர் உள்பட பல இளைஞர்களிடம் வாங்கிய பாஸ்போர்ட்களை மதுரை ஏஜெண்ட் ராஜ்கமலிடம் கொடுத்துவிட்டேன் ரூ.40 லட்சம் பணத்தை கன்னியாகுமரி கருங்கல் பகுதியை சேர்ந்த முகவர் அட்லின் வினோ சொன்னது போல அவரது மனைவி நிவேதா வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். சந்தோஷ் ராஜ் கூறியதை அடுத்து தனிப்படை போலிசார் மதுரை முகவர் ராஜ்கமலிடம் விசாரணை செய்து 10க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் விசாரித்ததில் இதுவரை 15க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியது தெரிய வந்தது.
மேலும் வெளிநாடு செல்லும் மோகத்தில் இருந்த இளைஞர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய கருங்கல் அட்லின் வினோ வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் பணத்தை வங்கிக் கணக்கு மூலம் வாங்கிய அட்லின் வினோ மனைவி நிவேதாவை போலிசார் கைது செய்தனர்.
வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவத்தில் இளம்பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், வெளிநாடு தப்பியோடிய அட்லின் வினோவை கைது செய்து விசாரணை செய்யும் போது மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வரும். இந்திய தூதரகம் மூலமாக அட்லின் வினோவை இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.