Skip to main content

’சுப்பிரமணியன் சாமி தொல்லை தருகிற இழிவான மனிதராகவே கருதப்படுவதால் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்’-கே.எஸ்.அழகிரி

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:  ‘’இந்திய அரசியலில் ஆதாரமற்ற அவதூறுகள், இழிவுபடுத்தும் குற்றச்சாட்டுக்கள், அச்சுறுத்தும் வகையில் விமர்சனங்கள் செய்வது பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு கைவந்த கலையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனால் தான் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பல்லக்கு தூக்கினாலும் அவரை கண்டு கொள்ள எவரும் தயாராக இல்லை. அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருக்கிறார்.

 

இதுகுறித்து பா.ஜ.க. தலைமை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அரசியலில் சுப்பிரமணியன் சுவாமி தொல்லை தருகிற இழிவான மனிதராகவே கருதப்படுவதால் எல்லோரும் அவரை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.

 

s

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் குறித்து கருத்து கூறும்போது, தேவையில்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். இத்தகைய அவதூறான கருத்தை கூறியதற்காக சுப்பிரமணியன் சுவாமி மீது நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 502 (உட்பிரிவு 2), 511 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரிவுகளின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்குகிற அளவுக்கு நீதிமன்றங்கள் தண்டிக்கிற வாய்ப்பு இருக்கிறது. 

 

இந்திய அரசியலில் நீண்டகாலமாக சுப்பிரமணியன் சுவாமியினுடைய யோக்கியதையையும், அருகதையையும், அனைவரும் அறிவார்கள். தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக நடைபெற்ற விநோதமான ஆர்ப்பாட்டங்கள் எத்தகையது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற சுப்பிரமணியன் சுவாமிக்கு பாடம் கற்பிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

 

இந்திய அரசியலில் நேரு பாரம்பரியத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பை ஆற்றினார்கள் என்பதை சுப்பிரமணியன் சுவாமிக்கள் மறுத்தாலும், வரலாறு மறுக்காது. இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் அமோக ஆதரவு அளித்து, நேரு பாரம்பரியத்தில் ராகுல்காந்தி அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பாரம்பரியத் தலைமையை அற்ப அரசியல் நடத்துகிற சுப்பிரமணிய சுவாமியால் கொச்சைப்படுத்திவிட முடியாது.

 

எனவே, அப்பழுக்கற்ற பதவி மறுப்பாளரான எங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது இத்தகைய இழிவான விமர்சனங்கள் செய்தை சுப்பிரமணியன் சுவாமி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி அவர் நிறுத்திக் கொள்ளவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இனியும் இத்தகைய இழிவான பிரச்சாரத்தை மேற்கொள்வாரேயானால் ஜெயலலிதா பாணியில் எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல், ஜனநாயக ரீதியில் சுப்பிரமணியன் சுவாமியை கடுமையாக விமர்சிக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மோடிக்கு எதிராக வாக்களிப்பவர்களை ஆதரிக்கிறேன்” - பா.ஜ.க மூத்த தலைவர் பரபரப்பு கருத்து 

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
BJP senior leader  says he support those who will vote against Modi

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில், ஆந்திரா (25), தெலுங்கானா (17), பீகார் (5), ஜம்மு (1), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா(4), உத்திரப் பிரதேசம்(13), மேற்கு வங்கம்(8), ஜார்க்கண்ட்(4) உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கு இன்று (11-05-24) மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், வரும் 13ஆம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வாரணாசி தொகுதியில் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாத வாக்காளர்களை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.க காரியகர்த்தா வேட்பாளர்களுக்கு வாக்களிக்க நான் ஆதரவளிக்கிறேன். ஏன்? ஏனென்றால், ஏப்ரல் 2020 முதல் லடாக்கின் 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்ற சீனாவை அனுமதித்த மோடி, வெட்கமின்றி அங்கு யாரும் வரவில்லை என்ற பொய்யைச் சொன்னார். இதனால், லடாக்கியர்களுக்கு செம்மறி ஆடுகளை மேய்ப்பதைத் தடுக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.  

Next Story

“கட்சி நலனுக்காக மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” - பா.ஜ.க மூத்த தலைவர் தாக்கு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Senior BJP leader subramanian swamy says Modi should step down for the good of the party

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.க.வின் கூற்றை காயப்படுத்தும் பெரிய ஊழலாக மாறியதால் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ.கவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.