Skip to main content

ஆளுருர் செல்லும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: கே. பாலகிருஷ்ணன் அறிக்கை

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

 

k.balakrishnan


தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் நியமித்த விசாரணைக் கமிஷனை ரத்து செய்யக்கோரி சிபிஐ (எம்) சார்பில் 25.4.2018 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அரசு விழாக்களுக்கு செல்லும் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபட்டதன் விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில், தமிழக ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.  
 

இப்பிரச்சனையில் ஆளுநர் தானாகவே முன்வந்து பேட்டியளிப்பது மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக வேண்டிய ஆளுநரே தானாக முன்வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையே.

இது சம்பந்தமான பேட்டியின் போது, பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்  அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் அவர் கன்னத்தை தட்டிய  செயல் ஆளுநரது நடத்தையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
 

தமிழகத்தில் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நீடிப்பது உண்மையை மூடி மறைக்கவே வழிகோலும்.
 

ஏற்கனவே மாநில அரசு உரிமைகளை தட்டிப்பறித்து, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, ஆய்வு என்கிற பெயரில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவது குறித்தான விமர்சனங்களை அவர் நிராகரித்தே வந்துள்ளார். 
 

எனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், இப்பிரச்சனையில் ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய வேண்டுமெனவும், ஆளுநர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ள இப்பிரச்சனையில் உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், உயர்மட்ட புலன் விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும் வலியுறுத்தி வரும் 25.4.2018 அன்று காலை 10.00 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைப்பார். மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆளுநர் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்