தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளதால் பா.ஜ.க. தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி என்றும், இனி பா.ஜ.க.- தி.மு.க. இடையேயான போட்டி தான் தமிழகத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார்.
அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் பற்றி கட்சிதான் முடிவெடுக்கும் எனக் கூறினார். மேலும் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்ற கருத்துக்கு, இந்தக் கருத்தை பா.ஜ.க. தலைவர் முருகன் சொல்லவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடரும். இந்திய அளவில் பிரபலமான கனிமொழியை டெல்லி விமான நிலையத்தில் எந்த அதிகாரியும் விசாரித்திருக்க வாய்ப்பில்லை, கனிமொழி தன்னிடம் நீங்கள் இந்தியரா எனக் கேட்டார்கள் எனப் பதிவிட்டிருப்பது அரசியல் செய்வதற்காகவே என்று கூறினார்.