காடையாம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் விதிகளுக்குப் புறம்பாக ஒரே நபருக்கு 41 லட்சம் ரூபாய் நகைக்கடன் வழங்கிய கணக்காளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் அடகு வைத்த நகைகள், அவர்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
பல இடங்களில் நகைக்கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதும், சில இடங்களில் போலி நகைகளை அடமானம் பெற்றுக்கொண்டு கடன் வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க விதிகளின்படி நகை அடமானக் கடன் பெறும் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கலாம். இந்த விதியும் பல சங்கங்களில் மீறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ், தொப்பூரில் கூட்டுறவு கடன் சேவை மையம் இயங்கிவருகிறது. இந்த மையத்தில், தர்மபுரி மாவட்டம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இரண்டு பெயர்களில் 187 பவுன் நகைகளை அடகு வைத்து 41 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு விதிகளை மீறி கடன் வழங்கியதாக தொப்பூர் கூட்டுறவு கடன் சேவை மையத்தின் கணக்காளர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து காடையாம்பட்டி கூட்டுறவு சங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தர்மபுரியில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்திலும் வெங்கடேஷ் 15 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
அதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி, ஜாகீர் அம்மாபாளையம் நகர கூட்டுறவு வங்கி மற்றும் இரும்பாலை, மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் நகைக்கடன் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். இவற்றில் விதிமீறல் கண்டறியப்பட்டால் வங்கிச் செயலாளர் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.