“உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்”என்ற ஆசை வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நகைக்கடை மோசடி குறித்த தகவல், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது யூடியூப் சேனலில் ஸ்போக்கன் ஹிந்தி கிளாஸ் எடுத்து வருபவர். அதுமட்டுமின்றி, திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவி தாலுகாவில், நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சுந்தர் அந்த நிறுவனத்தில் கொரோனா கோல்ட் பிஸ்னஸ் என்ற திட்டம் ஒன்றை தொடங்கி, அதில் 10 கிராம் தங்கம் வாங்கினால் 24 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளார்.
மேலும், அவரது யூடியூப் பக்கத்தில், "எங்க நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ்ல நீங்க நகை வாங்குங்க. நா உங்கள பணக்காரனா ஆக்குறேன். உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்" என ஆசை வார்த்தைகளுடன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, “உங்களால 10 கிராம் தங்கம் வாங்க முடியலையா? அப்ப வெறும் 8000 ரூபாய் பணத்த கட்டி இந்த திட்டத்தில் சேர்ந்துக்கோங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த பிசினஸ் பிடிக்கலைன்னா, மூணு மாசத்துக்கு அப்புறம், உங்க பணத்த கொடுத்துடுவோம். ஆனால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.
இதையடுத்து, இந்த திட்டத்தை உண்மை என நம்பிய அப்பாவி பொதுமக்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, அவர்களிடம் ஸ்டேஜ் என்ற முறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இந்த பிசினஸை சுந்தரின் மனைவி ஜெபகனி மற்றும் அவரது மகன் விஜய் என மூவரும் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.
அதே போல், ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதை போல், முதலில் சேர்ந்த நபருக்கு 24 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தரப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதில் பல்வேறு மாற்றங்களை செய்ததால், அந்த பிசினஸும் முடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணமும் போய் சேரவில்லை. இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் இந்த பிசினஸில் இருந்து வெளியேற கேட்டபோது, “முன்னர் கூறியது போல முழுத்தொகையும் கிடைக்காது” என சுந்தர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், பலமுறை செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று அணுகிய போது சரியான விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்தில் முதலீடு செய்த கோவையை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தரும்படி, கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.