Skip to main content

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்