ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் ராட்டிசன் ப்ளூ ஓட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வாலிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐ.பி.எல். போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 20 ஓவர்கள் கொண்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லைதவை. 2008ல் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெறுவதாக 2013 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக மும்பை மற்றும் சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு கிட்டி, பிரசாந்த் உள்ளிட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இந்தி நடிகர் விண்டூ ரந்த்வா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் பெயரும் இணைக்கப்பட்டது. விண்டூ ரந்த்வா, குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு சூதாட இடம் கொடுத்தது, பணம் வழங்கியது மேலும் இருவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியது என சென்னை ராட்டிசன் ப்ளூ நட்சத்திர விடுதி உரிமையாளர் விக்ரம் அகர்வால் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 23 பேருக்கு தொடர்பிருப்பதாக சிபிசிஐடி போலீசார் பட்டியலிட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 8 ஆம் தேதி புதன்கிழமை விக்ரம் அகர்வாலிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து விக்ரம் மீடியாக்களை தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டார். விசாரணை பற்றியும் போலீஸ்சார் தரப்பிலும் எதுவும் கூறப்படவில்லை.