Skip to main content

மீண்டும் சூடுபிடிக்கும் பழனி சிலை மோசடி! அதிகாரிகள் விசாரணை!

Published on 03/12/2020 | Edited on 04/12/2020

 

pazhani


பழனியில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளதால், ஊழியர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நவபாசன சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது. இந்தச் சிலை சேதமடைந்ததாகக் கோரி கடந்த 2004 ஆம் ஆண்டு ஐம்பொன்னாலான புதிய சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிலை மூலவர் சந்நிதானத்திலே வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஒரே கருவறையில் இரண்டு சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது, ஆகம விதிகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்தச் சிலை அகற்றப்பட்டு கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சிலை மோசடி வழக்கு விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலையைச் சோதனை செய்தனர். அதில் போதிய அளவு தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், இதில் மோசடி நடந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டது. அதனையடுத்து சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிலை வடிவமைக்கப்பட்ட காலத்தில் பணியில் இருந்த, இணை ஆணையர் ராஜா மற்றும் நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன், புகழேந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடி நடந்ததாகக் கூறப்பட்ட சிலை கும்பகோணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடமாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ஓய்வுக்குப் பிறகு, இந்த வழக்குக் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகப் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்துவந்தனர்.

 

இந்தநிலையில், மீண்டும் வழக்கு விசாரணையைத் தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலை மோசடி வழக்கில் கைதானவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தற்போது, மீண்டும் சிலை மோசடி விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி மாதவன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் பழனிக்கு வந்தனர். அவர்கள் இதுவரை சிலை மோசடி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு பழனி கோவிலில் பணியில் இருந்த அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பழனி கோவில் சிலை மோசடி வழக்குக் குறித்து மலைக் கோவிலுக்குச் சென்று பல்வேறு தரப்பினரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர். இதனால், கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்