Skip to main content

குமாரபாளையத்தில் தி.மு.க நிர்வாகி படுகொலை..!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

incident in kumarapalaiyam

 

நாமக்கல் குமாரபாளையத்தில், தி.மு.க வார்டு செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அந்தப் பகுதியின் (தி.மு.க.வின்) வார்டு செயலாளர். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது நண்பர்களுடன், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடையில் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞன் டூவீலரில் வந்து வேகமாக இறங்கியதோடு, திடுதிப்பென சரவணனை கீழே தள்ளிவிட்டு சரவணன் மீது அமர்ந்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தினார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரவணனுடைய நண்பர்கள், அந்தத் தாக்குதல் நடத்திய பிரகாஷை தடுத்தனர். அப்பொழுது சரவணனின் நண்பர்கள் பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஒடிவிட்டார். அதிக கத்திக்குத்து காரணமாக சம்பவ இடத்திலேயே சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சரவணனின் நண்பர்களான முரளிதரன், பிரபாகரன் ஆகியோரை, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

 

incident in kumarapalaiyam

 

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் அங்கு வந்து கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் ஒரு கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சரவணன் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதி திமுகவின் செயலாளராக உள்ளார். சரவணனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்ற பிரகாஷை போலீசார் வலைவீசித் தேடிவந்தனர். குமாரபாளையத்திலிருந்து (சேலம்) எடப்பாடி செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே கொலையாளி பிரகாஷும் அவனது நண்பனான கோவிந்தராஜூம் 21 ஆம் தேதி மாலை சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிறகு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்