சென்னை பல்லாவரத்தில் இளைஞர் ஒருவர் 'இந்த ஏரியாவில் உருவாகும் புது ரவுடி நான்...' எனக்கூறி கறிக்கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் மாதவன். பிஎஸ்சி படித்துள்ள இவர், அந்தப் பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிக் கடை வைத்துள்ளார். இந்தநிலையில், வாலிபர் ஒருவர் தினமும் மாலை வேளையில் வந்து பல்லாவரம் பகுதியில் புதிய ரவுடியாக நான் உருவாகி வருகிறேன். எனக்குத் தினமும் 50 ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
வழக்கம்போல் நேற்று மாலை வந்து கடையிலிருந்த இளைஞர்களிடம் ஐம்பது ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி இளைஞர், எடை போடும் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் கெஞ்சிய நிலையில், கல்லாவைத் திறந்து பார்த்ததில் 20 ரூபாய் மட்டும் இருந்துள்ளது. அதனை எடுத்துக் கொண்டு ரவுடி இளைஞர் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்பொழுது கடையில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள், உரிமையாளர் மாதவனுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த கடையின் உரிமையாளர் மாதவனிடம் மீதம் முப்பது ரூபாய் தரும்படி கேட்ட அந்த இளைஞர், தினமும் மறக்காமல் 50 ரூபாய் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார். 'நான் ஏன் உனக்கு மாமூல் தரவேண்டும்' எனக் கேட்டுள்ளார் மாதவன். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி இளைஞர், சாலையிலிருந்த கற்களை எடுத்து மாதவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த மாதவன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பல்லாவரம் காவல் நிலைய போலீசார் கறிக் கடையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து திரிசூலம் பச்சையம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த புது ரவுடியாக வலம்வர நினைத்த ஐயப்பன் என்ற நபரைக் கைது செய்துள்ளனர்.