சிறையில் உள்ள இளவரசிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சசிகலாவுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சசிகலாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இருப்பினும் அந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதி இல்லாததால், அதே பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சசிகலாவுக்கு முதலில் ஆர்.டி.பி.சி.ஆர். (RT-PCR) பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதன் பிறகு, அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதிலும் நுரையீரலில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சசிகலா உடனடியாக கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 'மருத்துவமனை கண்காணிப்பாளர் இன்று (23/01/2021) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது. சசிகலாவின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.
இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருந்த அவரது உறவினரான இளவரசிக்கும் நேற்று ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் இரண்டாவது முறையாக இளவரசிக்கு இன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் உடனடியாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.