Skip to main content

சட்டமன்றம் சென்றால் மக்கள் நீதி மய்யம் யாருக்கு ஆதரவாக செயல்படும்??? முரளி அப்பாஸ் பதில்...

Published on 26/04/2019 | Edited on 27/04/2019

தற்போது நடந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலும், இடைத்தேர்தலும் தமிழ்நாட்டில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏனைய கட்சிகள் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அளித்த பதில்...

 

mnm

 

4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் எப்போது அறிவிக்க இருக்கிறது?

 

ஏற்கனவே கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டது. நாளை 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அதற்கான கலந்தாய்வு தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வரும் சனி மற்றும் ஞாயிறு வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியதால், திங்கட்கிழமை அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 

 

இடைத் தேர்தலுக்கான பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றன?

 

முன்பை விட மிக உற்சாகமாகவும் எழுச்சியாகவும் சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை நடந்த அன்று வெளியான தகவல்கள் மிகவும் உற்சாகம் அளிக்கும்படி இருந்தது. மேலும் கட்சித் தலைவர் ஒரு தொகுதிக்கு  மூன்று நாட்கள் வீதம் ஒதுக்கியுள்ளார். இதனால் ஒவ்வொரு தெருவிற்கும் செல்ல முடியும், மக்களுடன் இன்னும் நெருங்கி பேச முடியும். இப்படி செல்கையில் பணம் கொடுத்து வாக்கு வாங்குவது என்பது மட்டுப்படுத்தப்படும்.

 

சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில சில தொகுதிகளில் வென்று சட்டமன்றம் செல்கிறது. அந்த நிலையில் ஒருவேளை ஆட்சி மாற்றம் என்பது வந்தால் மக்கள் நீதி மய்யம் யாருக்கு ஆதரவாக செயல்படும்?

 

இந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் சேரவேண்டும் என்றால், அதை இந்தத் தேர்தலிலேயே செய்திருப்போம். ஒன்று அகற்றப்பட வேண்டியது, இன்னொன்று வந்துவிடக்கூடாது இந்த விதிமுறை அங்கேயும் பயன்படுத்தப்படும்.

 

அப்போது மக்கள் நீதி மய்யம் இருவரையுமே ஆதரிக்காதா?

 

அவர்களே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும் சரி, இல்லை இவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி ஏற்றாலும் சரி, மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை அங்கு பேசுமே தவிர, அவர்கள் காப்பாற்றப்படுவதற்கோ, இவர்கள் வந்து சேர்வதற்கு வழி வகையோ செய்யாது. எங்களின் பங்களிப்பு அதில் இருக்காது.

 

 

 

சார்ந்த செய்திகள்